Monday, February 21, 2011

கிராம வளர்ச்சிக்காக பொறுப்பாக உழைக்கும் ஊராட்சித் தலைவர் ராஜு:

தன் கிராம வளர்ச்சிக்காக பொறுப்பாக உழைக்கும் ஊராட்சித் தலைவர் ராஜு: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்தைச் சேர்ந்த களிமண்குண்டு கிராமத்தின் ஊராட்சித் தலைவராக உள்ளேன். இது, மீனவக் கிராமம், அனைவரும் மீன் பிடிக்க சென்று விடுவர். குடிநீர் குழாய் உடைப்பு, சாலை சீரமைத்தல் போன்ற பணிகளுக்கு ஆள் கிடைக்காது.பக்கத்து ஊரில் இருந்து ஆட்களை கூட்டி வந்தாலும், "யார் குறைந்த கூலிக்கு வரத் தயாரா உள்ளனரோ, அவர்களை வைத்து தான், முடிக்கணும்'னு அலுவலக விதி உள்ளது. "வேலை முடிஞ்சதும், காசோலையாகத் தான் கூலியைத் தரணும்'ன்னும் விதி உள்ளது. அந்தக் காசு அவர்களுக்கு கிடைக்க 20 நாட்களாகிவிடும், அதனால், யாரும் வருவதில்லை.அதனால், ஊர் வேலைகள் சிலவற்றை நானே செய்து விடுவேன்.நான் படித்தது ஆறாம் வகுப்பு என்றாலும், ஊராட்சி வேலைகள் அனைத்தும் மனப்பாடமாக தெரியும். ஆரம்பப் பள்ளி, மைதானம், குடிநீர்த் தொட்டிகள், தெருக்குழாய்கள், நூலகம் என, அனைத்தையும் புள்ளி விவரங்களுடன் என்னால் கூற முடியும்.ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், என் தந்தை இறந்தபோது மட்டும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்திருக்கிறேன்.என் கிராமத்தின் வேலைகளை பிரதமரோ, முதல்வரோ, மந்திரியோ நேரில் வந்து செய்ய முடியாது; அதனால்தான் என்னை தலைவரா தேர்ந்தெடுத்து, பொறுப்பைக் கொடுத்துள்ளனர். அதைக் கடைசி வரைக்கும் சரியா செய்ய வேண்டும் என்பது என் ஆசை. வெள்ளை வேட்டி, சட்டை போட்டு, காரில் பந்தாவா போனா மக்கள் தேவை பூர்த்தி அடையாது.


நன்றி
தினமலர்

Wednesday, February 2, 2011

சுற்றுச்சூழல் பாதிக்காத "ஏர்கூலர்' கண்டுபிடிப்பு:

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, நவீன, "ஏர்கூலர்' உருவாக்கியதற்காக, மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி சத்யப்ரியாவுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.மதுரையில், பள்ளியளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில், சத்யப்ரியாவின் படைப்பு, பார்ப்போரை கவர்ந்தது. எனவே, மண்டல போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றார். அடுத்ததாக, டில்லியில் நடந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய அறிவியல் கண்காட்சி போட்டியில் இவரது படைப்பு போற்றப்பட்டது. மொத்தம், 18 மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

                  இதிலிருந்து ஐந்து சிறந்த மாதிரிகள், ஜெய்ப்பூரில் நடந்த, 37வது ஜவகர்லால் நேரு தேசிய அறிவியல் கண்காட்சியில் (குழந்தைகளுக்கானது) இடம்பெற்றன. அதில், இவரது படைப்பும் இடம்பெற்றது; தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் சென்னையில் நடந்த குழந்தைகள் அறிவியல் காங்கிரசிலும் பங்கேற்றார்.


சத்யப்ரியா கூறியதாவது:"ஏசி'யை பயன்படுத்துவதால் குளோரோ புளூரோ கார்பன்களின் அளவு அதிகரிக்கிறது. ஏர்கூலர் மூலம் ஓசோனில் மாற்றம் ஏற்படுகிறது. "ஏசி'க்கு மாற்றாக, அதே நேரம் ஏர்கூலரை புதிய விதமாக மாற்ற முயற்சித்தேன். களிமண் பானை, டியூப்கள், மின்விசிறி, தாமிர டியூப்கள் இவற்றின் மூலம் நவீன ஏர்கூலரை உருவாக்கினேன். வெட்டிவேர் மற்றும் நமக்குப் பிடித்தமான மூலிகைகளை ஏர்கூலரில் அடைத்தால், வெளியேறும் காற்று நறுமணமாக இருக்கும். 20 முதல் 30 டிகிரி வெப்பநிலையே இருப்பதால், உடலுக்கு இதமாக இருக்கும்.இந்த காற்றை சுவாசித்தால் ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படாது. குறைந்தபட்சம், 80 வாட்ஸ் மின்சாரம் போதும். 2,500 முதல் 3,500 ரூபாய்க்குள் செய்து விடலாம். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் தீங்கில்லாத இந்த ஏர்கூலருக்கு தேசிய விருது கிடைத்தது பெருமையாக உள்ளது.இவ்வாறு சத்யப்ரியா கூறினார். 

நன்றி
தினமலர்