Friday, June 24, 2011

துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள தயார்: அன்னா ஹசாரே ஆவேசம்

""சாவை கண்டு நான் அஞ்சவில்லை. லோக்பால் மசோதாவுக்காக துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொள்ளத் தயார்,'' என, அன்னா ஹசாரே கூறினார்.

போபாலில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நான் உண்ணாவிரதம் இருக்கும் போது, துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தாலும், அதை நான் எதிர்கொள்வேன். சாவைக் கண்டு அஞ்ச மாட்டேன். அப்படி எங்களை நோக்கி அரசு தரப்பினர் சுட்டால், "இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா' என்பதை, நாட்டு மக்கள் முடிவு செய்வர். மகாத்மா காந்தி, காமராஜர் போன்ற தலைவர்கள் வழி நடத்திய, காங்கிரஸ் கட்சி தான் தற்போது உள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது. போராட்டம் நடத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை. பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாங்கள் உண்ணாவிரதம் இருந்தால், அதை ஒடுக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது தெரிகிறது. ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அன்னா ஹசாரே மட்டும் ஈடுபடவில்லை. ஒட்டு மொத்த நாட்டு மக்களும் இதற்கு ஆதரவு தருகின்றனர். எங்களின் போராட்டத்தை முடக்க நினைத்தால், மக்கள், அரசுக்கு சரியான பாடம் புகட்டுவர். இவ்வாறு ஹசாரே கூறினார்.

அதே நேரத்தில், லோக்பால் மசோதா தொடர்பாக, சமூக பிரதிநிதிகள் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: அரசு உருவாக்க விரும்பும் லோக்பால் அமைப்பு, ஊழலை ஒழிக்காது. அதற்கு மாறாக, ஊழல் குறித்து புகார் கொடுப்பவர்களை அடக்கி விடும். லோக்பால் மசோதா தொடர்பாக அரசு தரப்பினர் தெரிவித்துள்ள பரிந்துரைகளில், பெரும்பாலான அரசு அதிகாரிகள், லோக்பால் விசாரணை வரம்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊழல் புரிந்தவர்களுக்கு சாதகமாகவும், அவர்கள் தப்பிக்கும் வகையிலும் சில விதிகள் இடம் பெற்றுள்ளன. கிராம அளவில் உள்ள சிறிய அரசு சார்பற்ற அமைப்புகளைக் கூட, லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரும் போது, பெரும்பாலான பொது ஊழியர்களை இந்த வரம்பில் இருந்து நீக்குவது எப்படி சரியாக இருக்கும்.

அரசு தரப்பினரின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியினர் சங்கங்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் போன்றவற்றின் செயல்பாடுகள் எல்லாம் முடங்கி விடும். உதாரணமாக, குக்கிராமத்தில் உள்ள வாலிபர் சங்கத்தினர், ஊராட்சி பணிகளில் ஊழல் நடப்பதை கண்டுபிடித்தால், அவர்களின் செயல்பாடுகளை லோக்பால் மூலம் முடக்கி விட முடியும். அதற்கு மாறாக கிராம ஊராட்சித் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊழல் அதிகாரிகள் தப்பிக்க முடியும். அவர்கள் விசாரணை வரம்பிற்குள் வர மாட்டார்கள். இப்படிபட்ட நிலையில் தான், அரசு தரப்பினர் தயாரித்துள்ள வரைவு மசோதா உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment